ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவத்தின் கடைசி தாக்குதல் படைப்பிரிவும் வெளியேறியது
ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவத்தின் கடைசி தாக்குதல் படைப்பிரிவும் வெளியேறியது. ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து நெருக்கடி எழுந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என, அறிவித்தார்.
இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் நான்காவது ஸ்ட்ரைக்கர் பிரிகேட், இரண்டாவது இன்பன்ட்ரி டிவிஷன் ஆகிய கடைசி தாக்குதல் படைப் பிரிவுகள் நேற்று காலையில் வெளியேறின. குவைத் வழியாக இந்த படைப்பிரிவினர் நேற்று வெளியேறினர். அப்போது அவர்கள், தாங்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளதாக தெரிவித்தனர். அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் படைப்பிரிவினர் வெளியேறினாலும், வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தங்கியுள்ளனர். ஈராக் ராணுவத்துக்கு ஆலோசனை கூறுவதற்காகவும், அமெரிக்காவின் நலன் கருதியும் இந்த படைப் பிரிவினர் அடுத்தாண்டு இறுதி வரை அங்கு இருப்பர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தாலும், சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவற்றை அவர்கள் பயன்படுத்துவர் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவம், ஈராக்கில் முகாமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.